இந்திய அரசு மேக் இன் இந்தியா என்ற ஒரு உன்னதமான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி அனைத்து பொருட்களையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு அரசு எல்லா உதவிகளையும் செய்யும். இது மிகப் பெரும் விளம்பரமும் செய்யப் பட்டது. இவ்வாறு இந்திய அரசின் கொள்கை இருக்கும் போது இந்தியா இல்மனைட்டில் இருந்து உற்பத்தி செய்யப்படும் டைட்டானியத்தை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதற்கு காரணம் தனியார் இல்மனைட் சுரங்க பணிகள் நிறுத்தப் பட்டு இந்திய அரசு நிறுவனமான ஐஆர்இஎல் மட்டுமே தற்போது இல்மனைட் குவாரி செய்கிறது. இவர்கள் இந்தியாவில் உள்ள டைட்டானியம் உற்பத்தியாளர்களின் இல்மனைட் தேவையை பூர்த்தி செய்வதில்லை. மாறாக ஒரு பகுதி மட்டும் வழங்கி ஒரு பகுதியை சீனாவிற்கு நேரடியாக ஏற்றுமதி செய்கிறார்கள். எனவே இந்திய டைட்டானியம் உற்பத்தியாளர்கள் அதிக விலை கொடுத்து இல்மனைட்டை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியது உள்ளது. எனவே இவர்களது டைட்டானியம் விலை கூடுதலாகி விடுகிறது. ஆனால் மிகக் குறைந்த விலைக்கு இந்திய அரசு நிறுவனத்தின் இல்மனைட்டை கொள்முதல் செய்யும் சீனா குறைந்த விலையில் டைட்டானியத்தை உற்பத்தி செய்து இந்திய டைட்டானியம் நிறுவனங்களிடம் விலை போர் நடத்துகிறது. இந்திய அரசின் எந்த அலுவலரும் இதனை கண்டு கொள்வதில்லை. இதனால் இந்தியாவில் உள்ள மொத்தம் ஐந்து டைட்டானியம் உற்பத்தியாளர்களில் கோல்மாக் கெமிக்கல்ஸ் மற்றும் ஜெனித் மெட்டல்ஸ் ஆகிய நிறுவனங்கள் தொழிலையே மூடி விட்டார்கள். எனவே இன்னும் மூன்றே மூன்று நிறுவனங்கள் மட்டுமே இந்தியா முழுவதும் டைட்டானியம் உற்பத்தியில் உள்ளன. அவற்றை இந்திய அரசு நிறுவனத்தின் சரக்கை வாங்கும் சீனா அடிக்கிறது. தற்போது இந்திய அரசு செய்ய வேண்டியது (1) சீனாவில் இருந்து இந்தியாவிற்கு டைட்டானியம் இறக்குமதி செய்யும் போது இறக்குமதி வரியை கூட்டி விதிக்க வேண்டும் அல்லது (2) இந்திய டைட்டானியம் உற்பத்தியாளர்களுக்கு தேவையான இல்மனைட்டை சப்ளை செய்து மிகுதியாக இருக்கும் இல்மனைட்டை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என ஐஆர்இஎல்-க்கு தடை விதிக்க வேண்டும். (3)டைட்டானியம் உற்பத்தியாளர்களுக்கு தேவையான இல்மனைட்டை அவர்களே குவாரி செய்து கொள்ளலாம் என சுரங்க குத்தகை வழங்க வேண்டும்.
இவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் தற்போது அமெரிக்கா புலம்புவது போல் இந்தியா புலம்பும் காலம் வெகு தொலைவில் இல்லை. மேக் இன் இந்தியா என்பது ஒரு கவர்ச்சிகரமான பேச்சாக மட்டுமே அமைந்து விடும்.

No comments:
Post a Comment